Home செய்திகள் இந்தியா திரை ஓட்டம் – ஒரு உளவியல் பார்வை | தமிழ் முதல்வன்

திரை ஓட்டம் – ஒரு உளவியல் பார்வை | தமிழ் முதல்வன்

661
0
Share

உடலுழைப்பில் கடுமையாக ஈடுபடக் கூடிய வெகுமக்களை அடுத்தடுத்து காண்பிக்கப்படும் விரைவுக்கட்சிகளால் தொகுக்கப்பட்ட திரைப்படங்கள் ஈர்ப்பதும், உடலுழைப்பற்ற சொகுசு வாழ்க்கை மேற்க்கொண்டிருக்கக் கூடிய மேல்தட்டு மக்களை யதார்த்தமான realtime ல் ஓடக் கூடிய திரைப்படங்கள் ஈர்ப்பதும் ஏன்?

உள்ளக்கிடக்கையை உள்ளபடியே உடல்மொழியில் கொணரும் நேர்மையான வெளிப்பாடுகளையுடைய அடித்தட்டு மக்களை மிகைப்படுத்தப்பட்ட நடிப்புகள் ஈர்ப்பதும், உள்ளத்திற்கும் முகத்திற்குமான இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டு எதிர்மறையான உடல்மொழிக் கூறுகளைக் கொண்டு
பொய்மையான வெளிப்பாடுகளில் வாழும் மேல்தட்டு ரசிகர்களை மிகையற்ற, யதார்த்தமான நடிப்புகள் ஈர்ப்பதற்கும் காரணம் என்ன?

இந்தக் கேள்விகளை கடந்த ஆண்டில் அமெரிக்கன் கல்லூரிக்கு வந்திருந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியனிடம் கேட்டேன். அவர்,உங்கள் கேள்விகளே எனக்குப் புரியவில்லை என்று கூற, அதற்கு மேல் அந்தக் காலச் சூழ்நிலையில் எப்படி எளிமைப் படுத்திக் கேட்பதென்று எனக்கும் தெரியவில்லை.இப்படி படைப்பாளிகளும், தொழில் நுட்பத்தினரும் புரிதல் இல்லாமலேயே பார்வையாளர்களை ஈர்க்கும் பலவகையிலமைந்த தொழில் முறையை செய்து வருவது குறிப்பிடத் தக்க ஒன்று.

மேற்கண்ட உளவியல் பரிமாணங்களை பரிசோதித்துப பார்த்தால் பல விவரக் கூறுகள் தென்படுகின்றன. அன்றாட வாழ்க்கைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அற்பக் கூலிகளுக்காக கடுமையான உடலுழைப்பில் ஈடுபடக் கூடிய வெகு மக்களின் நிலையானது, உழைப்பில் இழந்த உடலின் ஆற்றலைக் கூட மறுகட்டுமானம் செய்யமுடியாத அளவுக்கு உள்ளது. உழைப்பின் காலங்களில் கிடைக்கும் ஓய்வுகள் கூட குறுகிக் கிடக்க, நீண்ட காலங்களில் உழைப்பவரின் மனவெளிகளில் அயர்வு,களைப்பு,வலி, அடுத்து வரும் குறுகிய ஒய்விற்கான ஏக்கம் ஆகியவைகளே நிரம்பிக்கிடக்கின்றன. குனிந்து நிமிரும் வயல் வெளிகளில் அல்லது உடற் பாகங்கள் இயல்புநிலைக்கு திரும்பும் தொழிற் கூடங்களில் கிடைக்கும்இளைப்பாற்றுதலில்  விடும் பெருமூச்சுகூட வாழ்க்கை நகர்வின் அடுத்தகட்ட தேவைகளை எப்படி நிறைவு செய்வது என்ற நடுக்கத்திலேதான் விடப்படுகிறது.  இவ்வாறு வலிகள்,   வேதனைகளால் இறுக்கப்பட்டு அமையும் காலங்களின் ஒவ்வொரு நொடியின் ஒவ்வொரு   துளியும் ஒரு யுகமாகவே முடியும்; அந்த மெதுவாய் நகரும் சூழ்நிலையை விரைவாய் கடக்கவே உழைப்பாளியின்  மனம் விரும்புகிறது.

இப்படியாக அழுத்தும் சுமைகள் நிறைந்த பெரும்பான்மையான காலங்களின் கைப்பற்றுதலிலிருந்து விடுவித்துக்கொள்ள ஊடக வெளியில் தம்மை நுழைத்துக் கொள்கின்றனர் உழைக்கும் மக்கள்.  இன்பக் கிளர்ச்சிக் கூறுகளால் நிரப்பப் பட்ட ஊடக வெளிகள்  எளிதில் அவர்களை தன்வயப் படுத்துகிறது. தம்மைச் சூழ்ந்துகொண்டு சுமையாய் மெதுவாய் கடந்த உண்மை இருப்புக் காலங்களிலிருந்துவிடுபட்டு வேகமாய் முடியும் திரையின் காட்சிகளில் புகுந்து கொண்டு அடுத்தடுத்த கட்சியின் நிகழ்வுகளை விரைவாய் தேடுகின்றனர். திரைக்  கொடையாளர்களும்  திகட்டத் திகட்டத் தந்து அவர்களையும், அவர்கள் புற உலகில் தேடிவைத்த பொருள் ஆதாரங்களையும்,சமூக ஓட்டத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய வாழ்வாதாரங்களையும், வரலாற்றில் இருத்தி வைக்கக் கூடிய,  அடையாள படுத்தக் கூடிய பண்பாட்டு ஆதாரங்களையும் அவர்களையறியாமலேயே திருடிக் கொள்கின்றனர்.

உண்மை நிகழ தளத்தில் எதிர் கொள்ளும் ஒரு சூழலை பெரும் காலம் செலவு செய்து கடந்துசெல்கிற உழைப்பவர்,திரைக்களத்தில் அடுத்தடுத்து பல சூழ்நிலைகளை குறுகிய காலங்களில் கடந்து செல்லும்போது, அவருடைய மனங்களின் இறுக்கம் மாயையாக, தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.    இன்பமுடையதாகவோ துன்பமுடையதாகவோ நிகழப்போகும் வாழ்கையின் முடிவுக்காக நீண்டகாலம் காத்திருக்கும் பொறுமையிலிருந்து  விடுபட்டு,குறிப்பட்ட நேரத்தில் ஒருமுடிவுக்கு வரும் திரையின் கதைகளில்  இன்பமாக முடிந்தாலும் , துன்பமாக முடிந்தாலும் அதில் தம் வாழ்கையின் முடிவையும் இணைத்துக் கொண்டு தானாகவே ஆற்றுப் படுத்திக் கொள்கின்றனர். இந்தவகையிலேதான், வாழ்வின் நீண்ட கால அல்லது குறுகியகால இலக்கு மற்றும் அவ்வப்போது வாழ்வினூடாக செல்லக் கூடிய வெற்றி உணர்வு அல்லது தோல்வி உணர்வு உள்ளிட்ட அனைத்துவித மனத்தோன்றல்களையும் மாயையாக நிகழ்ந்துமுடிகிற திரைக்களத்தில் பொறுத்திவிட்டுத் தான் எங்கு, எப்பொழுது,எப்படி, எச்சூழலில் வாழுகிறோம் என்ற உண்மைநிலை மறந்து நடைச் சடலகளாய்  திரிய உழைக்கும் மக்கள் பழக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர்.  ‘பொழுதே போகமாட்டேங்குது’ என்பவரின்  மனம்,விரைவுபடுத்தப்பட்ட பொழுதுகளால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வில் நிறைவு கொள்வது  இப்படித்தான். .வசதிகளையும், அதைக் குறைவுப் படுத்தாத ஆதாரங்களையும் குவித்துக்கொண்ட சொகுசு வாழ்க்கை மேற்கொள்பவர்களின் காலங்கள் யாவும் மென்மையாகவே சுமையற்று சுகமாகவே கழிகின்றன. அடுத்து வரும்  ஒவ்வொரு  நகர்வையும் இன்பம் பயக்கக் கூடியதாக, இலாபகரமாக மாற்றுவது குறித்த அவர்களின் திட்டமிடலும் இது குறித்த அவர்களின் இறுமாப்பும் அடுத்த வேளைகுறித்த நடுக்கத்தினை உண்டாக்குவதில்லை.  அடுத்தகட்ட இன்ப நுகர்வினை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும் அவர்களுக்கு காலம் போதாமலிருக்கிறது. ஒய்வு அல்லது தூக்கம் என்று அவர்கள் எடுத்துக் கொள்ளும் காலங்களில்கூட ஒருவித இன்பத்தை நுகரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்படி எந்தச் சுமையுமற்று மென்மையாக ஒடக்கூடியக் காலங்கள் களிப்புடனே செலவு செய்யப்படுவதால் வேகமாய் காலங்கள் கழிவதாய் உணர்கிறார்கள்.

அதனாலேயே, மெதுவாய் செல்லக்கூடிய சூழ்நிலைகளில்,REALTIME ல் யதார்த்தமாக ஓடக்கூடியக் காட்சிகளில், சொல்லவந்த கருத்தை சுற்றிவளைத்தோ அல்லது மறைமுகமாகவோ சொல்லும் படங்களையே விரும்புகிறார்கள். பாலினக் கவர்ச்சியின் உச்சத்திலிருக்கிற இளவயது ஆண் பெண் சந்திப்புகளின்  காலங்கள் யாவும் இன்பம் நிறைந்ததாய் காலம் போவதே தெரியாமல் இருப்பதைப் போல இன்பமயக் கவர்ச்சியில், அதை அனுபவிக்கும் ஆதாரமும் ஆதரவும் உள்ள மேல்தட்டுமக்கள் அவர்களின் களிப்போடுகூடிய வாழ்க்கையை விரைவாய் கழிவதாய் உணருகிறார்கள். வாழ்நாளை, இன்பம் பயக்கக் கூடிய காலங்களை பலமடங்குகளில் பெருக்க ஓடும் அவர்களின் வன்மம், மாயையான , யதார்தத்த  நிலை திரைப் படங்களில் நிறைவுகொள்கிறது.   உழைப்பிற்கு  ஈடான கூலியைவிட பன்மடங்கு வருவாய் பெரும் உயர்தட்டு உழைப்பாளிகளுக்கு வலியென்றால் என்னவென்றே தெரியாமல்,.தேவைக்கும் அதிகமாய் சேர்த்துக் கொண்ட ஆதாரங்களின்மூலம் இன்பத்தின் பன்மடங்குகளைப் பெருக்க, அதை நுகருவதற்கான உடற்பாகங்கள் அவர்களுக்குப  பற்றாக் குறையாகி, வேறு பயன்பாட்டுக்குரிய உடம்பின் சில பாகங்களையும் இன்பம் நுகரத்தக்கதாக மற்றுவதற்க்கான ஆராய்ச்சிகளையும் ஒளிப்படங்களின் வழியே செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான காலமும் அவர்களுக்குப் போதவில்லை.

இப்படியான விரைவுப் போக்குகளில் சிக்கியுள்ள அவர்களின் மனம், அதே விரைவுக்கட்சிகளை வெறுத்து பொறுமையாய் காட்டப்படும் காட்சிகளில் மூழ்குகிறது. வேகப்படுத்தப்பட்ட,விரைவாய் முடிந்துகொண்டிருக்கிற அந்த உண்மை வாழ்க்கை வெளிகளில் சலித்துப்போய் யதார்த்த கட்சிகள் நிறைந்த பொய் உலகில் நிறைவுகொள்ளும் இவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்களே மிகச் சிறந்த படங்களாகப் பரப்பப் படுகிறது. பாராட்டப் படுகிறது.

சிறு  காரணங்களுக்காகக் கூட சண்டையிட்டு முட்டிக்கொள்ளும் சிற்றூர் பாமரமக்களின் பகட்டும் பகுமானமுமற்ற பச்சையான அவர்களின் வாழ்க்கையில் உள்ளத்திற்கும் முகத்திற்குமான  இடைவெளிக்கு இடமில்லாமல் இருக்கிறது. உள்ளே பகையுணர்வை வைத்துக்கொண்டு வெளியே போலியாக புன்னகையுதிர்க்கத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளுவதும், உள்ளே மகிழ்வுற வெளியே பலர் முன்னிலையிலும் தான் மட்டும் சிரித்துக்கொள்ளுவதுமாக கபடமற்ற வெளிப்பாடுகளைக் கொண்ட அவர்களின் முகவெளிகள் உள்ளத்தோடு நேரடித் தொடர்புகொண்டவையாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது.

சிறிய வருத்தம் உண்டானாலும் முறைத்துக்கொண்டு குடும்ப உறவுகளுக்குள்ளேகூட அடித்துக் கொள்ளும் சிற்றூர் வாழ்வில் அடுத்த திருவிழா, குடும்பவிழா அல்லது இறப்பு நிகழ்வு போன்றவற்றில் அந்த வருத்தத்தைத் துடைத்துக் கொண்டு சண்டைகளை மறந்து ஒன்றாகிவிடுவது இயல்பு. அவர்களின் அகப்புற வெளிப்பாட்டுக்  கூறுகள் யாவும்  தொலைதூரம் அவர்களோடு செல்லாமல் அவ்வப்போது தோன்றி மறையும் இயற்கையை ஒத்த விதிகளையுடையனவாய் இருக்கின்றன.தோன்றும் உணர்வுகளின் அளவீட்டின் அடிப்படையிலேயே  அவர்களுடைய உடல்மொழிகளின் வெளிப்பட்டுக் கூறுகள் மிகையும் குறைவுமற்று வெளிப்படுகின்ற பொழுது, அவைகள் அவர்களின் சிந்தனைத் தளத்தில் அல்லது வாழ்க்கைத் தளத்தில் பதிவுகளின்றி விளைவுகளின்றி வாழ்க்கை இயல் கூறுகளில் ஒன்றாகக் கலந்துவிட்டிருகின்றன.

ஒளிவு மறைவற்றதாய் இறுக்கும் அடித்தட்டு வாழ்க்கை ஓட்டத்தில் அவர்களின் கள்ளமற்ற சிந்தனைத் தளத்தை பிறரையே சார்ந்திருக்கும்  பொருளாதார  சூழ்நிலை, பலவகை சிக்கல்களினால், சித்தாந்தங்களினால் பின்னிவைக்கப்பட்டுள்ள சமூகச் சூழ்நிலை, தன்முடிவில் பயனற்றுக் கிடக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் மேற்குறிப்பிட்டவாறு அவ்வப்போது தோன்றிமறையும் குடும்ப உறவுச் சிக்கல்கள் ஆகியவைகளே கைப்பற்றியிருப்பதனால் வருத்தங்கள், ஏக்கங்கள், கவலைகள்,ஆகியவைகளே அவர்களைச் சூழ்ந்துள்ளன. உடல்மொழிகளைவிட வாய்மொழிகளே பெரும்பங்கு வகிக்கும் அவர்களின் அன்றாடத் தொடபியல் வேளைகளிலும் அனிச்சையாகவே நெற்றி , கன்னம், புருவம்,தாடை ஆகியவைகளில் சோகங்களும், கவலைகளுமே தோய்ந்து உடல்மொழியாக அவர்களின் வாழ்வியலைத் தெளிவுபடுத்துகிறது.

வாழ்வின் நடைமுறைகளில் வழக்கமாக வெளிப்படுத்தும் வாய்மொழி, உடல்மொழிக் கூறுகளை எண்ணப் புலப்படுத்தலைத் தாண்டி  மிகையாக,தனியாக அவர்கள் ஒரு பாவனையாக உணருவதில்லை. அவ்வாறு,தான் பாவனை செய்ததை உணரும் நிலைகளை அல்லது அதற்கு உந்தப்படும் சூழ்நிலைகளை எண்ணி வெட்கமும் வேதனையும் படுவதுண்டு. ஆனால், அதே பாவனைகள் புறநிலைகளிலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் வெளிப்படுகின்றபோது அது  அவர்களுக்கு வியப்பாகவும், புதுமையாகவும்,ஈர்ப்பாகவும் அமைகிறது.

ஒலியையோ,சொற்களையோ ஊடுபாவு செய்யாமல், மிகைப்படுத்தப்பட்ட மெய்ப்பாட்டு அசைவுகள், இயக்கங்கள் ஆகியவற்றின்  மூலமாக மிகவும் சாதாரணமான அன்றாட நடவடிக்கைகளை உருவகித்து காட்டும் ஒரு நாடகவடிவம்தான் பவனை என A .P .Royee  விளக்குகிறார்.சொற்களோடு கூடிய உடல் அசைவு, ஆடை அலங்காரம் மற்றும் மிகவும் நுணுக்கமான உடல்வழியிலான உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றைக்  கொண்டதே பாவனை என  Judith Lynne Hanna  விளக்குகிறார். இப்படி பல்வேறு வகைமைகளில் விளக்கப்படும் நாடக வடிவமான பாவனையை, தன்னிடம் இல்லாத ஒன்றை பிறரிடம் காணும்போது அது இயல்பாகவே ஈர்ப்புக்குள்ளாகின்றது.  ஒரு நிலையில்  அது அவர்களின் அடக்கிவைத்த உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. இந்த வகையிலேதான் யதார்த்த மனிதர்களை மிகையான நடிப்புகள் ஈர்க்கின்றன. யதார்த்தமற்ற பகட்டு வாழ்க்கை மேற்கொள்பவர்களை மிகையற்ற நடைமுறையிலமைந்த அசைவுகள் ஈர்க்கின்றது.

எந்த ஒன்றிலும் இலாபமீட்டும் உயர்தட்டு மக்கள்,    உள்ளக் கிடையிலிருந்து வரும் சொற்களை அது கொணரும் உணர்வுகளை மிகைப்படுத்தும் அல்லது அழுத்தம் கொடுக்கும்பொருட்டு நெற்றியைச் சுருக்கியோ, கண்களை அகல விரித்தோ, விழிகளை பலகோணங்களில் உருட்டியோ, புருவங்களை வளைத்தோ தலையை அசைத்தோ, கைகளை அசைத்தோ பல்வேறு வகைப்பட்ட வாய்மொழி சாராத மொழிக் கூறுகளை பயன்படுத்தப் பழக்கப் பட்டிருக்கின்றனர். அதுவே அவர்களது தொழில் உத்தியாகவும் புகட்டப்படுகிறது. இலாபமூட்டும் வேட்கையால் பிணைக்கப்பட்ட அவர்களின் தொழில்முறை வாழ்க்கையில்  கணவன் மனைவி, தாய் சேய் ஆகியோருக்கிடையிலான பாசப் பரிமாற்றங்களில்கூட செயற்கை வெளிப்பாடுகளான பாவனைகளே நிரம்பிக் கிடக்கையில், இயற்கையாய் தோன்றும் புலப்பட்டுப் பரிமாற்றங்களின் மேல் அவர்களையறியாமலே அவர்கள் ஏக்கம் கொள்கின்றனர்.  நாய், பூனை, குருவிகள்,கிளிகள், மீன்கள் போன்றவைகளின் இயற்கையான வெளிப்பாடுகளில் வியப்படைந்து நிறைவு கொள்கின்றனர். இன்றும் பலர் தாங்கள் குழந்தைகளைவிட நாய்களின்மேல் அன்பைப் பொழிவதும் இந்த உளவியல் தன்மை கொண்டதுதான்.  இயல்பு நிறைந்த இயற்கைத் தாவரங்களையும்,சூழ்நிலைகளையும், கட்சிகளையும் அவர்கள், மெய்சிலிர்க்க வைக்கும் ஈர்ப்புமிகு எழில் வடிவங்களாகக் கண்டு வியக்கிறார்கள். அழுத்தங்களற்ற, சுமைகளற்ற வாழ்க்கை மேற்கொள்ளும் அவர்களின் பார்வைக்கு, அடித்தளமக்களின் அவலமிகு வாழ்வியல் கூறுகளும் உண்மையான அவர்களுடைய நடைமுறைப் போக்குகளும், பழக்கவழக்கங்களும் பொழுது போக்குவகையில் அவர்களுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வகையிலேதான் மேல்தட்டுப் பார்வையாளர்களை யதார்த்தவாதத் திரைப்படங்கள் கவருகின்றன.

இப்படிப்பட்ட  இன்னும் பல வகையான  உளவியல் கூறுகளை திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறியும் நிலையில், நடிகர்களோடு இவர்களும் அரசியல் கனவுகாணும் வாய்ப்புண்டு

-தமிழ் முதல்வன்

tamizhmuthalvan@gmail.com


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here