Home ஆன்மீகம் மகாளய அமாவாசையில் தர்ப்பணம் ஏன் ?

மகாளய அமாவாசையில் தர்ப்பணம் ஏன் ?

369
0
Share

கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார்.

சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.

தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் ” கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்”.

ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
குரு விளக்குகிறார் ” கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. ”

கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.

கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.

யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.

கர்ணன் ” யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்.”
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.

” யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here