Home செய்திகள் இந்தியா ”லட்சுமி எனும் பயணி”யின் வாழ்க்கைப் பாதை

”லட்சுமி எனும் பயணி”யின் வாழ்க்கைப் பாதை

499
0
Share

லட்சுமி எனும் பயணியின் வாழ்க்கைப் பாதை
*****************************************
இந்நூல் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்ல முற்பட்டுப் பல பெண்களின் உணர்வுகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்றால் மிகையில்லை. லட்சுமி அம்மா ஒரு எளிய மனுஷி தான் ஆனால் அவர் பயணித்த பாதை அவரை ஒரு இரும்பு மனுஷியாய் மாற்றி விட்டிருக்கிறது.

எப்போதுமே அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆர்ப்பாட்டம் செய்வதும்,அதற்கான ஆட் சேர்ப்பும், மருத்துவ உதவி, உணவு தயாரித்தல் போன்றனவாகவே இருந்தது. அதனையே லட்சுமி அம்மாவும் செய்து வந்திருக்கிறார் என்றாலும் தன் வீட்டுச் சூழலில் அவர் அனுபவித்த மன அழுத்தங்கள் அனேக பெண்கள் தம் வாழ்வில் அனுபவித்த உணர்வுகளே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் வெற்றிக்கும் அதுவே காரணம் என நினைக்கிறேன். இந்நூலுக்காக
லட்சுமி அம்மாவிற்குக் கிடைத்த ஸ்பேரோ விருது, மற்றும் சிறந்த செயற்பாட்டாளர், சிறந்த ஆளுமை போன்ற அங்கீகாரங்கள் அனைத்துமே அவரின் வெற்றி தான். நமக்கென்ன என்று இல்லாமல் தன்னால் முடிந்தவற்றை அவசியம் கருதிச் செயற்பட்டு வெற்றியும் கண்ட அவரது துணிவும் பலமுமே குடும்ப வாழ்க்கையில் கணவனின் உதவியின்றி குடும்ப பொறுப்பைச் சுமக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்குத் துணையாய் நின்றன.

“உழைப்பையே தன் லட்சியமாய்க் கொண்ட பெண்களே என் வளர்ச்சிக்குக் காரணம்” என்ற அவரது பதிவு அனைத்துப் பெண்களுக்கும் எதையோ ஆணித்தரமாகச் சொல்லிச் செல்கிறது. பெண்களின் உழைப்பு சுரண்டப்படுதல் என்பது எவ்வளவு தீவிரமடைந்தாலும் மன்றத்தில் பேசப் படுவதில்லை. அரசியலில் கொடி கட்டிப் பறக்கும் ஆணைப் பற்றிப் பேச முற்படும் சமூகம் அவனைப் பராமரித்து, அவனது குடும்பத்தைப் பொறுப்பேற்று, அவனது வேலைப்பழுவை உணர்ந்து வீட்டுச் சூழலையும் பொருளாதாரத்தையும் கட்டிக் காக்க வேலையும் செய்து ,அவனது வேலையிலும் உதவியாக வாழ்ந்து மறைந்து போகும் பெண்களைப் பற்றிப் பேச முன் வருவதில்லை.

இவரது வாழ்க்கையை பெண்ணிலை வாத அடிப்படையில் நோக்க முற்பட்டால் பல முரண்பாட்டு புரிதல்களுக்குள் நாம் ஆட்பட நேரலாம். இந்நூல் பல பகுதிகளையும் பல சவால்களையும் பல திருப்பங்களையும் கொண்டு ஒரு சுவாரசியத்தை வாசிப்பவரின் மனதில் ஏற்படுத்திச் சென்றுள்ளது. பொதுப் பணிகளில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்ட லட்சுமி அம்மாவினால் தன் வீட்டுச் சூழலை ஒரு சில சந்தர்ப்பங்களில் சமாளிக்க முடியவில்லை. அதை அவர் பல இடங்களில் அழுகையுடனும், புன்னகையுடனும் கடந்து சென்றிருப்பார். அந்த அனுபவம் அனேக பெண்களுக்கு உண்டு. ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் குடும்பம் தவிர்ந்த கூட்டுச் செயற்பாடுகளும் நட்பு வட்டங்களும் பெரும் பங்காற்றியிருப்பதை இந்நூல் பதிவு செய்திருக்கிறது.

தான் குடும்ப வாழ்க்கைக்குள் முடங்கிப் போகாதிருக்க சமூகப் பணிகளில் தன்னை வெகு ஆர்வத்துடன் முன்னிலைப் படுத்தியிருக்கிறார் லட்சுமி அம்மா. தன் குடும்பத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட பின் அவருக்குள் ஏற்பட்ட வைராக்கியங்கள் தான் அவரை உருவாக்கியது என்றே நினைக்கிறேன். குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு ஆரவாரமின்றி உழைத்த பெண் ஒருத்தியின் வாழ்க்கையே இந்நூல். தன் வாழ்க்கைப் பயணத்தை எழுத்துருவில் கொண்டு வர எண்ணிய லட்சுமி அம்மாவை வியக்கிறேன். அதனைப் பதித்த மைத்திரி பதிப்பகத்திற்கும், பிரேமா ரேவதி மற்றும் கிருஷ்ணவேணிக்கும் நன்றிகள். மொத்தத்தில் அருமையான அற்புதமான பதிவுகளைக் கொண்ட நூல்.

நிலாந்தி
மட்டக்களப்பு
இலங்கை


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here