Home இலக்கியம் தொ(ல்)லைக் காட்சிகள் | வீடு புகுந்து தாக்கும் காட்சி ஆயுதம் | தமிழ் முதல்வன்

தொ(ல்)லைக் காட்சிகள் | வீடு புகுந்து தாக்கும் காட்சி ஆயுதம் | தமிழ் முதல்வன்

557
0
Share

தொல்லைக் காட்சிகள்
 
    தனியுடமைச் சிந்தனையை உள்வாங்கியபோது சிதறிப் போனது மானுடக் கூட்டம். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பொதுமைச் சமூகத்தில் கூட்டாக வாழ்ந்ததன் எஞ்சிய அடையாளமாய் இருந்த கூட்டுக் குடும்பங்கள் , இன்று நம்மிடையே இல்லாமல் போய்விட்டன. வளர்ந்து வரும் உலக, தாராளமயங்களின் நெருக்குதல்களால் நமது வாழ்வியல் கட்டுமானங்களை இழந்து விட்டோம்; வேலை வாய்ப்புகள், விவசாய சாகுபடி வாய்ப்புகள் ஆகியவற்றையும் இழந்துவிட்டோம். மேலும், வளர்ந்து வரும் நவீன அறிவியல் ஈன்றுபோட்ட தொலைக் காட்சிப் பெட்டிகளால் நமது கூட்டு வாழ்முறைகளையும் இழந்து விட்டோம்.
நடைமுறையில் காணும் உண்மையான உலகைவிட, மிகைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை ஊடகங்களின் கற்பனைப் பிம்பங்கள் வழியாக உற்பத்தி பண்ணும் போலியான உலகம்தான் இன்றைக்கு மனிதர் நடமாடும் வாழ்விடமாக கட்டமைக்கப் படுகிறது. மனவெளியில் திணிக்கப்படுகின்ற கற்பனைப் பிம்பங்களை மெய்யாக உணரும் களிமண் நிலைக்கு மானுடத்தைத் தள்ளுகின்ற வல்லாதிக்க அரசுகளின் உந்துகோளாய் ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து பின்னி இறுகியுள்ள வலைகளில் ஊடகங்கள் எளிதில் மாட்டிக்கொண்டு மக்கள் மனதை ஊனமாக்கும் கதிர்வீச்சை உமிழ்கின்றன. வீரியமிக்க அவ்வீசுகளை மென்மையாக உணர்ந்து சுகம் கொள்ளும் மக்கள் மெல்ல மெல்ல மாக்களாக (விலங்குகளாக) உளஉருமாற்றம் செய்யப்படுகிறார்கள். தொடர்ச்சியான தொலைகாட்சி அலைவரிசைகளில் சிக்கிச் சீரழியும் மக்களை ( குறிப்பாக நமது பெண்களை ) ஒரு பொழுது மீட்டாலும் வலையில் சிக்கிய மீன்களாய் துடித்துத் துவண்டு போய்விடுகிறார்கள்.
ஆண் பெண் தோற்றங்களில் நிகழும் இயற்கையான பாலினக் கவர்ச்சிகளைக் கூட மிகைப்படுத்தி கொச்சையாகக் காட்டுவதன்மூலம் பெற்றோர் x பிள்ளைகள், சகோதர x சகோதரிகள் போன்ற இன்னும் பல உறவுகளில் தேவையற்ற மனக்குறுக்கத்தை ஏற்படுத்தி உறவுமுறைகளை சிதைப்பது போன்றவற்றைச் செய்கிறது இன்றைய ஊடகங்கள். அதன்மூலம் குடும்ப ஆளுமைகளைச் சிதைத்து சமூக மனநிலையிலிருந்து உதிரிமனநிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதச் செயல்களையும் தொலைக்காட்சிகள் செம்மையாகச் செய்துவருகின்றன. பொறுப்பற்ற எல்லாச் செயல்களையும் செய்வதான ஒரு பிம்பத்தை உருவாக்கி, தான்தோன்றித்தனமான மனநிலையில் தோய்த்து, கற்பனைகளின் எல்லை தாண்டியும் கொண்டுபோய் ஆண்டுக் கணக்கில் ஆட்டம்போட்டு மக்களை அலற வைத்துக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு மாற்றாக, உண்மைத் தன்மையான நிகழ்வுகளை, மாந்தர்களை, வாழ்க்கையினை சொல்லும் வண்ணமாக ஒரு தொடர்களையும் தொலைக்காட்சிகள் வழங்குவதில்லை.
பெரும்பாலான வாழ்க்கையின் காலங்களை ஊடகங்களே சூழ்ந்துவிட்ட சூழலில், ஊடக வழியிலேயே பெரும்பான்மையோரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. பள்ளி நேரம்போக துள்ளிவிளையாடும் எள்ளளவு காலங்களையும் கொள்ளைகொண்டுவிட்டன தொலைக்காட்சிப் பெட்டிகள். தொலைக்காட்சியின் தொல்லையில்லா காலங்களில், நிலவைப் பார்த்துக் கொண்டே பெரியவர்கள் சொல்லும் கதைகளில் உலாவந்த சிறார்கள் , கதைகளில் வரும் பாத்திரங்களையும், சூழல்களையும் உள்ளங்களில் உருவகம் செய்து, கதையாடல் வழியே சென்று, கதைக் களத்திலுள்ள பாத்திரங்களை தன் மழலைப் போக்கில் வழிநடத்தி, புதியதொரு கதையை உருவாக்கும் கற்பனைவளமும், படைப்பாற்றலும் பெற்றிருந்தார்கள். இப்பொழுதெல்லாம் இத்தகைய திறமைகளின்றி தொலைக்காட்சிகளின் மாயவித்தைகளில் வியந்து, மயங்கி தன் கற்பனை – படைப்பு, சிந்தனை உள்ளிட்ட அத்தனை ஆற்றல்களையும் இழந்து வெறும் வேடிக்கை மனிதராகவே வளரும் அவலநிலையை இன்றையத் தொலைக்காட்சிகள் ஏற்படுத்திவிட்டன.
இங்கே சிந்தனைத் தளம்கட்ட வாய்ப்பில்லாமல் போனதால், தொலைகாட்சி நாயகர்களின் மாயச் செயல்களை தானும் செய்ய முற்பட்டு, எத்தனையோ குழந்தைகள் தங்களின் வாழ்வை அத்தனை சீக்கிரம் முடித்துக்கொண்டன. ஓடித்தாவி, கைகோர்த்து, கட்டிபிடித்து, கண்டுபிடித்து, கூட்டாக மகிழ்ந்து உடலும் உள்ளமும் ஆற ஆடிய விளையாட்டுகள் மறைந்து, இறுக்கமான மனநிலையுடன் இன்று தனிமைப்பட்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் முடங்கிவிட்டனர் குழந்தைகள்.அதிலும் குறிப்பாக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபின்னர் கிராமக் குழந்தைகளின் நிலை கல்வியிலும், காலத்திற்குத் தகுந்த ஊட்டதிலும்,சமூக சூழலிலும் மிக மோசமாக உள்ளது. ழான் பொத்ரியார் அவர்களின் மொழியில் , ஓர் உலோக அடைப்பனுக்குள் வான் வெளியில் மிதக்கும் ஒரு நிலையில்தான் இன்றைய சிற்றூர் மக்கள் இருத்திவைக்கப் படுகிறார்கள். இதை முதலில் வெளிச்சப்படுத்தினால்தான் குழந்தைகளின் வழமையான எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.
பல்வேறு நோயூக்கிகள் சூழ்ந்துள்ள மிகவும் ஆபத்தான உலக நிலைமைகளில் எதிர்ப்பாற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கும், அமுதம் போன்ற தாய்ப்பால் சுரக்கும் மழலைகளுக்கான மார்பகங்களை, இன்றையப் பெண்கள் எதிர்பாலினத்தவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தும் போக்குக்கு ஊடகங்களே முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. தாலாட்டும் பாட்டுக்களை தாய் வீட்டோடு விட்டுவிட்டு குறுந்தகடும் ஒலிபெருக்கியும் சீதனமாக் ஏந்திவரும் நவீன காலப் பெண்கள் குழந்தையை உருவாக்கும் இயந்திரங்களாக மட்டுமே ஆகிவிட்ட சூழலில், தாய்ப்பால் கொடுப்பதுகூட தன் இளமைக்குப் பாழ் என்று பால்சுரப்பிகளை ஊசிபோட்டுக் கட்டுப்படுத்தி, பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக வளர்க்கின்ற இன்றைய நிலைமைகள் குழந்தைகளின் எதிர்காலத்தின் மேல் சொல்லொணா துயரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றன. விளம்பரப்படுத்துகிற செயற்கை உணவுகளை பெட்டிபெட்டியாக கொட்டிக் கரைத்துப் புகட்டுகின்ற புட்டிகளைக் கூட குழந்தைகளின் கையில் கொடுத்துவிட்டு அந்தப்புரத்துப் பெண்களாய் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் தொலைந்துவிடுகின்றனர். மொழியினைக் கற்றுக்கொடுக்கும் தாயிடமே, தன்னுடைய தாய்மொழியை அறியமுடியாத ஆபத்தான சூழலையும், தூய தமிழின் வங்கி போன்ற சிற்றூர் மக்கள்கூட தொடர்ச்சியாக நான்கு தமிழ்வார்த்தைகளைப் பேசிவிட்டால் தாழ்வுமனப்பானமை கொள்ளும் மிகமிக ஆபத்தான சூழலையும், இன்றைய ஊடகங்கள் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்துவிட்டன.
தன்னைத் தானே உணர முடியாத அயல்வெளியில் மக்கள் தூக்கிஎறியப்பட்டுவிட்டநிலையைப் பயன்படுத்தி , மொழி , இனம், பண்பாட்டு அழித்தொழிப்பு வேலைகளை தீவிரமாக, பயங்கரமாக, மறைமுகமாக செய்துவருகின்றன இன்றைய ஊடகங்கள். தமிழைப் பேசாவிட்டாலும் குற்றமில்லை, பலமொழிகளை ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் கொட்டித் தீர்க்கும் வாயாடிகளைக்(தொகுப்பாளர்கள்) கொண்டு தமிழை தமிழரிடத்திலேயே அறியாவண்ணம் காவுகொள்கின்றன. பாடப் புத்தகங்களோடு சரி, தமிழ் ஆசிரியர்களும் பிறமொழிக் கலப்பின்றி பேசமறுக்கும் இறுக்கம் நிறைந்துள்ள, தமிழை முற்றிலும் புறக்கணிக்கின்ற வசதிமிக்க பெரும் கல்விக்கூடங்கள் நிறைந்துள்ள சூழல்களுக்கு ஊடகங்கள் துணையும் நிற்கின்றன. மேலும், அரசுத் தொடர்புகளிலும், வெளியீடுகளிலும் கூட வேறுமொழி புகுத்தப்பட்டுள்ள அவலநிலையை உருவாக்கிவரும் அரசுகளும் இதற்கு முழுப் பொறுப்பாகின்றன.
வெறும் இனக் கவர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட தொகுப்பாளர்களையே மூலதனமாக்கி நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள், விடுப்பு நாட்களில் நடிக நடிகையரை வீட்டிற்குள் கூட்டிவந்து அவர்களின் தான்தோன்றித் தனமான நடப்புகளைப் பெருமையாகச் சொல்லவைத்து , அதுவும் தமிழை பேசத் தெரியாமல் உளறுவதே புகழ்சிமிக்க ஒன்றாகக் காட்டி நினைக்கவைத்து, அவர்களையே வாழ்க்கையின் மாதிரிகளாகவும், அவர்கள் சொல்வதே வாழ்வின் இலக்காகவும் கொள்ளுகின்ற நிலையை ஊடகங்கள் செய்து வருகின்ற வேளையில் விடுப்பு நாட்கள் கெடுப்பு நாட்களாக மாறிவிட்டன.
‘குலுக்கல்’ பாடல்களையும், உடலுறுப்புகளை, உடல்மொழிகளை, உடலின் நிறத்தை இழிவாகப் பேசி வெகுமக்களின் ஆளுமையைச் சிதைக்கும் நகைச் சுவையென்ற பெயரிலான நச்சுச்சுவைக் காட்சிகளையும், வீட்டுக்குள் திணிக்கின்றன ஊடகங்கள். மேலும், வெறுக்கப்படுகின்ற வில்லன் பாத்திரங்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மோசடி செய்கின்ற, காதலிப்பது மட்டுமே இளைஞர்களுக்கு இலக்காகச் சொல்லிக் கொடுக்கின்ற, சாதிமேலாண்மை செய்கின்ற கதாநாயகர்களையே போற்றி சாதியை நிலைநிறுத்துகின்ற , புனைவான பாத்திரங்களின்வழி மக்களின் மன மாற்றங்களைத் தடுக்கின்ற திரைப்படங்களையே நம்பி பிழைப்பு ஓட்டும் தொலைக்காட்சிகள், மக்களுடைய சிந்தனைத் திறத்தின் மேல் பெரும் வன்முறையே செய்துவருகின்றன.
ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுக் கொண்டவர்கள், நிகழ்ச்சியைவிட விளம்பரத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கின்ற நிலையில் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்கள். ஒரு மட்டை விளையாட்டின் போது(கிரிக்கெட்), ஓட்டங்கள் எடுத்து ஓடிவந்துகொண்டிருந்த இந்திய அணித் தலைவரின் கையில் எறியப்பட்ட பந்து அவரை துடிக்க வைத்தது. அப்பொழுது அவரின் நிலையைக் காட்டுவதற்குப் பதிலாக விளம்பரங்களையே காட்டி அவரின் துன்ப நிலையை மறைத்திட்டனர். இவ்வாறு முக்கிய நிகழ்வுகளிலும், செய்திகள் போன்ற கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய இடங்களிலும் விளம்பர இடைவெளிகளை உண்டுபண்ணி கவனச்சிதறல்களை ஏற்படுத்துகின்றனர். மேலும், இப்பொழுதெல்லாம் செய்திகளை விளம்பர நிறுவனங்களே வழங்கும் நிலையில் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டும், திரித்துவிடப்பட்டும் உண்மைகள் மக்களிடத்தில் மறைக்கப்படுகின்றன.
மேலும், விளம்பரங்கள் பெண்களை மிகவும் இழிவுபடுத்துவதாக அமைகின்றன. வீட்டில் பூசியிருக்கும் வண்ணத்தைக் கண்டு மயங்கிய பெண் அந்த வீட்டுக்கு மருமகளாக விரும்புகிறாள். ஆனால், அந்தவீட்டு பையன் பத்து வயது சிறுவனாக இருந்த போதிலும் அவன் வளரும்வரை காத்திருக்கவும் துணிவதாக ஒரு விளம்பரம் வந்து , பெண்கள் பகட்டுகளுக்கு எளிதில் மயங்கும் தன்மையுடையவர்களாகவும், அதனால் வாழ்க்கையையே ஈகம் செய்யக் கூடியவர்களாகவும் காட்டப்படுகின்றனர். இதைவிடவும் கேவலமாக, ஒரு மிட்டாயை பல ஆண்கள் ஒரு பெண்ணிடம் கொடுக்க, அதை சுவைத்தவுடன் சுவையில் மயங்கி அத்தனை ஆண்களுடனும் உறவுகொள்ள ஒப்புக் கொல்லுவதைப் போல ஒரு விளம்பரம் வந்து, பெண்கள் சிறு காரணத்தினாலும் எளிதில் தன்வயப்பட்டுவிடக் கூடிய மனநிலையை உருவாக்குகிறது. இன்னொரு விளம்பரத்தில், ஒரு ரொட்டி நிறுவனம் ஐம்பது பைசாதள்ளுபடி தருகிறது என்ற செய்தி காதில் பட்டவுடன் மருத்துவர்களாலேயே கைவிடப்பட்ட ஒரு பெண் காப்பாற்றப்படுகிறாள். இப்படியாக பொருளாசை, சுயநலம், போட்டி போன்றவைதான் பெண்களின் குணம் என்றவாறு விளம்பரங்கள் ஒரு மனநிலையை கட்டமைக்கிறது.
விளம்பரங்களின்மூலம் சரக்குகளில் ஏற்றப்படும் கவர்ச்சியானது, பொருளின் பயன்பாட்டு மதிப்பீட்டிற்கும் மேலாகவே தவறான மோகத்தை திணிக்கிறது. சரக்கையும், அதன்மீது உருவாக்கப்படும் கவர்ச்சியும் இணைவதை காரல்மார்க்ஸ் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவ சமூகம், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முன்னரே விளம்பரங்களின்மூலம் அந்தப் பொருளைத் தேடும் மனநிலையை உற்பத்தி செய்கிறது. வாங்கும் ஆவலை மக்களிடத்தில் அவர்களையறியாமலே ஏற்படுத்திவிடுகிறது. ஒரு பொருளை நாம் உணர்வதில்லை; உணர விடுவதுமில்லை. அதிகார ஊடகங்கள் , நாம் எப்படி உணர வேண்டுமென்று விரும்புகிறதோ , அதன்படிதான் நாம் அந்தப் பொருளை உணர்கிறோம். ஆக, நாம் உணர்வது அந்தப் பொருளையல்ல; அதுகுறித்து ஊடகங்கள் புனைந்துள்ள போலிமைகளைத்தான். விளைவு, நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வே போலியாகிவிடுகிறது. இதனால், நனவிலி மனதில் பேரச்சம் பெருகி , மனிதர்களுக்குரிய படைப்பு மனத்தை இழந்து யாருடைய கையிலோ நம்மை இய்க்கும் பொத்தனை கொடுத்துவிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடமாடும் இயந்திரமாகி விடுகிறோம் என்கிற ழான் பொத்ரியாரின் எழுத்துக்களின் வழியே மீண்டும் பயணிக்கும்போது, விளம்பரமே அனைத்தையும் முடிவுசெய்யும் அளவுகோலாக உள்ள சூழலில்தான் நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு நாம் விரும்பாமலே நம்மைச் சூழ்ந்து தாக்கும் தொலைக்காட்சிகள் மிகப் பெரும் தொல்லைக் காட்சிகளாக மாறிவிட்டன. அவைகளிலிருந்து விடுபட மக்களே தயாரிக்கும் மக்களுக்கான குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் திரைப்படக் கழகம் என்றென்றும் துணை நிற்கும்.
18th April 2013
தமிழ் முதல்வன்

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here