Home செய்திகள் இந்தியா என்னுடைய பார்வையில் – சைக்கோ

என்னுடைய பார்வையில் – சைக்கோ

1080
0
Psycho 2020 film
Psycho 2020
Share

சைக்கோ’ படத்தை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தேன். நல்லாயிருந்ததுனு விட்டுட்டேன். ஆனால்…அதைப் பற்றித்  தெருவுக்கு நாலுபேரு நாலுவிதமாச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சமூக வலைத்தளப் புலிகள் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அறிவு ஜீவி என்று சொல்லிக் கொள்வோர் சிலர் இல்லாத மட்டையைப் பிரித்து மேய்ந்துகொண்டிருந்தார்கள். சிலர் வேய்ந்த கூரையைப் பிரித்து நாலாபுறமும் உதறிக் கொண்டிருந்தார்கள். இதனால் என் கைபேசியிலும், கணினியிலும் ஒரே தூசி துப்பட்டைகள்.
சரி.. இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் ஒரு கை பார்த்துருவோமென வெளக்குமாத்த எடுத்து தொடைச்சு முடிச்சு, கண்ணாடியைக் கழட்டி வச்சுட்டு என் பார்வையில் அந்தப் படத்தைப் பற்றி யோசித்தேன்.

Psycho 2020 film
Psycho 2020

’சைக்கோ’ எல்லோரும் சொல்வது போலப் பெரிய திகில் படமா? என்றால் இல்லை. தொடர் கொலைகள் செய்யும் ஒரு கொலைகாரனை வில்லனாக வைத்து நாயக பிம்பம் பேசும் படமா..? எனில் இல்லை. காதலியைக் காப்பாற்றுவதற்காகக் காதலன் மேற்கொள்ளும் துணிவும் சாகசமும் கொண்ட படமா..? எனில் அதுவுமில்லை.

காவல்துறையின் இயந்திர அதிகாரத்திற்கு மாற்றான எதிர் அதிகாரத்தைக் குறியீட்டு மொழியாகக் கொண்ட படமா..? எனில் அதுவுமில்லை. பிறகு தமிழக, இந்திய, ஆசிய.., உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டவையா? என்று பார்க்கக் கூடிய கண்ணாடியும் என்னிடம் இல்லை. மேலும் அதன் ஆக்கம், வெளிப்பாட்டுத் தன்மை,  பார்வையாளர்களைச் சென்றடையும் விதம் இவை பற்றிய விமர்சகர்கள் பார்வைக்குள் நுழையாமல், அந்தப் படம் கருகொண்ட அல்லது சொல்லவரும் செய்தி என்ன என்பதுவே என் பார்வை.

கடவுள், புனிதம், தேவலோகம், சொர்க்கம், மறு பிறவி ஆகியவற்றை முன்னிறுத்திப் புனையப்படும் சமய, மத வழிகாட்டுதல்கள், ஒழுக்கங்கள், சடங்குகள், நெறிமுறைகள், கண்காணிப்புகள் யாவும், மனிதரின் அன்றாட உணவு, உறக்கம், தனிமை, சுய சிந்தனை, சுய ஆற்றுப்படுத்தல்கள் உள்ளிட்ட தனிமனித சுதந்திர இயல்புகளைக் குற்றங்களாகச் சித்தரிப்பவையாக இருக்கின்றன.

அதிலும் பணம் புரளும் சமய-மத நிறுவனங்கள் யாவும் தங்களைச் சார்ந்து இயங்குகிற சேவை நிறுவனங்களில் பணியாற்றுவோரை, படிப்போரை மட்டுமல்லாது ஆற்றுப்படுத்தற்காகவும், சமயப் பணிக்காகவும் தங்களைச் சார்ந்திருப்போரை நிரந்தரக் குற்றவாளியாக்கி எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. ஆம். அவர்களின் அன்றாடச் செயல்பாடுகள் யாவும் கடவுளின் பார்வையில் நடப்பதாக எண்ணிக் கொண்டு, சுயத்தை சமய-மத நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

ரோமன் கத்தோலிக்க சபைகள் :

குறிப்பாக சமயப் பணிக்காகத் துறவு மேற்கொள்வோரை கடும் விதிகளின் கீழ் கண்காணிப்பதில் ரோமன் கத்தோலிக்க சபைகள் பெயர் போனவை. அங்கே, ஆண் துறவிகளுக்கு இருக்கும் சுதந்திரம் பெண் துறவிகளுக்கு இல்லை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் உடையுடுத்துவதில், விரும்பிய இடங்களுக்குச் செல்வதில், ஆங்காங்கு பாலுணர்வு உள்ளிட்ட உடல் மனத் தேவைகளை மறைமுகமாக நிறைவேற்றுவதில் சுதந்திரம் உண்டு. அதற்கு ஆண் சுப்பீரியர்கள் ஒத்துழைப்பார்கள்.

ஆனால், கன்னியர் மடங்களிலோ அந்த சுதந்திரம் இல்லை. சுப்பீரியர் சிஸ்டர்கள் என்பவர்கள் கடும் கங்காணிகள். இவர்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக கன்னியர்கள் தனித்தனியே மெனக்கெட வேண்டும். கன்னிமார்களுக்கான ஒவ்வொரு சபைக்கும் தனித் தனிச் சீருடைகள் இருக்கின்றன. தமக்கான சொந்த அறைகளில் இரவு நேரங்களில் உடுத்தும் உடைகளில் கூட சீருடை வண்ணங்கள்தான். இவ்வாறு ஒரே நிறத்திலான சீருடைகளில் தங்களை ஒழித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. பயணங்களிலும்
கட்டுப்பாடு உண்டு. சமயப் பிரார்த்தனை நிமித்தம் மட்டுமே அவை சாத்தியம். பிறந்த வீட்டிற்குச் செல்லவும், பெற்றோர் பார்க்கவம் கூட ஆண்டுக்கொரு முறை சில நாட்கள் மட்டுமே அனுமதி. அவர்கள் மற்றவர்கள் மீது வரைமுறையுடன் கூடிய அன்பைச் செலுத்தலாம். ஆனால் அவர்களுக்கோ அந்த வரைமுறையுடன் கூடிய அன்புகூட இயேசு  பிரானிடத்திலிருந்து வரும் என்ற நம்பிக்கையைத் தவிர எதுவுமில்லை.

துறவு வாழ்க்கை : 

psycho tamil movie songs
Psycho Tamil Movie

மேலும் துறவு வாழ்க்கை வாழ்வதனால் பாலுணர்வு அறவே கூடாது. சுய இன்பங்கள் பாவகரமானது. அப்படியான உணர்வு தோன்றினால் பைபிள் வாசிக்க வேண்டும்; கான்வெண்ட்டுக்குள் இருக்கும் பிரார்த்தனை அறையில் இயேசு உருவம் முன்பு மன்னிப்புக் கேட்க வேண்டும். தன் உடலை உணர்ச்சியற்ற பிண்டமாக வைத்திருக்கப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ’கார்மெல்’ சபை என ஒன்று உண்டு. அதில் சேரும் கன்னிமார்களுக்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். இல்லையெனில் உலகை வெறுத்தவராக இருக்க வேண்டும். அந்த சபையின் கான்வெண்டில் இருக்கும் கன்னியர்களின் அறை சிறைக்கூடம் போல மிகச் சிறியதாக இருக்கும். உணவு ஒரு வேளைதான். சில நேரங்களில் இரு வேளை மட்டுமே. உணவை மறுப்பதன் மூலம் தன்னை வருத்திக் கொண்டு அதன் வழியாக உடலுணர்வுகளைக் கருக்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் வளாகத்திற்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை. அனைத்தும் பெண்கள்தான். அந்தக் கன்னியர்கள் ஆண்களைப் பார்க்கவே கூடாது. எந்த உணர்வுமற்று எந்நேரமும் கடவுள் உணர்விலேயே இருக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க அப்படியே இருந்து சாக வேண்டும். உண்மையாகத் தன்னை சபைக்கு அடிமையாக ஒப்படைத்து சைக்கோவாக வாழ வேண்டும்.

இப்படிப் பட்ட சைக்கோ மனநிலையின் பாலுணர்வுப் பிறழ்வு வழியிலான மனித வெறுப்பே, தன்னைத் தலையில்லா முண்டமாகப் பாவித்துக் கொள்வது.

இந்தப் பாவனையைப் பாத்திரமாகக் காட்ட முயல்வதுதான் மிஷ்கினின் “சைக்கோ”.

தன்னுடையப் பாலுணர்வுகளைத் தானே கருக்கிய புகையில் படிந்து அழுந்திய பாத்திரமே சைக்கோ படத்தின் கான்வெண்ட் கன்னியாஸ்திரீ-ஆசிரியர். அவர் புத்தகத்தைப்பிடிக்கும் சித்தரிப்பு என்பது ஒழுக்கப் பிரம்புகளால் ஒடுக்கப்பட்டவளின் உளவெடிப்பை உணர்த்தும் குறியீடாகும்.

கத்தோலிக்கக் கான்வெண்ட்டுக்குள் தங்களை உணர்ச்சியற்ற முண்டங்களாக்கிக் கொள்ள, தலைகளை வெட்டிக் கொள்ளும் ஒவ்வொரு கன்னியரின் அரூபத் தாண்டவக் குறியீடுகளே சைக்கோ ராஜ்குமாரின் தொடர் கொலைகள்.

சமய ஒழுக்கத்தின் சுவர் இருளுக்குள் வாழும் கன்னியரின் கண்காணிப்புக் கத்தி முனையால் மாணவப் பருவத்தில் தன் இயல்புணர்வு வெட்டப்பட்ட இளைஞரின் மனப் பிறழ்வு நடவடிக்கைகளே படம்.

கொலையாளியாக ஒரு பெண் பாத்திரம்தான் இருந்திருக்க வேண்டும். கொலை செய்யப்படுபவர்கள் ஆண்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வணிக சினிமா ஃபார்முலாவில் வன்முறைக்குச் சரியான ஆள் ஆண் தான் எனவும், வன்முறையால் பாதிக்கப் படுவதற்குச் சரியான ஆள் பெண் தான் எனவும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் கொலைகாரனாக ராஜ் குமார் வருகிறார். பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.

சுய இன்பம் செய்ததற்கு கன்னியரால் உடலளவில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, மனதளவிலும் பெரும் குற்றவாளியாகத் திணிக்கப்பட்டதன் விளைவுகளால் உருவான ஒருவனின் சைக்கோ செயல்பாடுகள்தான் அந்தக் கொலைகள் என்று அந்தப் பாத்திரத்தைக் கதையோடுப் பொருந்துமாறு வடிமைக்கிறார் மிஷ்கின்.

வெளியுலகிலிருந்து முற்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற துறவியர் மடங்களின் அந்தரங்க உளவியல் கூடாரங்களின் குறியீடுதான் சைக்கோ படத்திலுள்ள ராஜ் குமாரின் பன்றிப் பண்ணைக்குள் இருக்கிற கொலைக்கூடம். இதை மிரட்டலாக அமைத்த கலை இயக்குநர் க்ராஃபோர்டுக்கும், தேவையான ஒளித் தெளிப்புடன் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் தன்விருக்கும் பாராட்டுக்கள்.

இப்படியான சமய-மத நிறுவனக் கட்டுப்பாடுகளால் ஒடுக்கப்பட்டுத் தன்னை இழந்தவர்களுக்கு, மாற்றாகத் தனி மனித உணர்வுகளை மதிக்கும், பகுத்தறிவைப் போதித்துத் தனிமனித ஆளுமையை வளர்க்கும் ஒரு சமயக் குறியீட்டையும் முன்வைக்கிறார் மிஷ்கின்.

புத்தர் சிலை, அதனுடன் தொடர்புடைய கௌதம், தாகினி, கமலா, அங்குலிமால் ஆகிய பெயர்கள் போன்றவை கவனிக்கத்தக்கன.

புத்தர் குறித்த கதைகளில் வரும் பெயர் அங்குலிமாலா :

Psycho 2020
Udhayanidhi Stalin

பிறப்பால் தன்னைப் பிராமணன் எனச் சொல்லிக்கொண்ட, அஹிம்சன் எனும் இயற்பெயரைக் கொண்ட அங்குலி மாலா என்பவன் தன் குருவுக்குத் தட்சணையாக ஆயிரம் மனிதச் சுண்டுவிரல்களால் கோர்க்கப்பட்ட மாலையைக்  கொண்டுவரப் பணிக்கப்பட்டான். அங்குலி என்றால் சுண்டுவிரல்; மாலா என்றால் மாலை. அஹிம்சன் இப்படிதான் அங்குலி மாலா ஆனான்.

999 மனித விரல்களைச் சேகரித்தவன் ஆயிரமாவது விரலுக்காகப் புத்தரைக் கொலை செய்ய முனைகிறான். அந்நேரத்தில் புத்தர் காட்டிய அமைதியும் அன்பும் அவனை ஈர்த்துவிடப் புத்தரின் சீடராகிறான்.

அப்படியே மிஷ்கின் வெர்சனுக்கு வந்தால், பாலுணர்வு மறக்கடிக்கப்பட்ட ஆசிரியரால், சுய பாலியல் ஒழுக்கக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டு சைக்கோவான அங்குலிமால் பெண்கள்மீது தொடர் கொலை நிகழ்த்துகிறான். அதிலும் வாழ்க்கைப் பாடுகளுக்காக பாலியல் தொழில் செய்யும் பெண்களையும் கொல்கிறான். இறுதியாக தாகினியைக் கொல்ல முயல்கிறான். கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கும் தாகினியோ மாறாக, அவன்மீது அன்பை வெளிப்படுத்துவதைக் கண்டு மனம் மாறுகிறான். தான் செய்த கொலைகளுக்குத் தன்னையேக் கொலைசெய்து தண்டனையளித்துக் கொள்கிறான்.

புத்தரைத் தாகினி வடிவில் காட்சிப்படுத்துகிறார் மிஷ்கின்

இங்குதான் புத்தரைத் தாகினி வடிவில் காட்சிப்படுத்துகிறார்  மிஷ்கின். தன் மீது நிகழ்த்திய துன்பத்திற்குப் பரிசாக அன்பைப் பொழியும் பெண் இயல்புகளைப் புத்தர் வடிவில் பார்ப்பது புதிய பரிமாணம்.

அந்தப் புத்த இயல்பைத் தேடியலையும் கெளதம்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிற குறியீடும், நீதியுணர்ச்சியுள்ள அதிகாரிகள் செயல்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை கமலாதாஸ் பாத்திரத்தின் வழி சொல்கிற மிஷ்கினுடைய காட்சிமொழிகளும் சிறப்பு.

பார்வையுடைய நபரைவிடப் பார்வையற்றவர்களின் உலகம் பிரமாண்டமானது, வண்ணமயமானது என்பதை தன்னுடைய உலகம் தழுவிய இசைக் கோர்வையின் மூலம் காட்டுகிறார் இளையராஜா. குறிப்பாகக் கொடூரக் கொலைகாரனைக் குழந்தையாக அள்ளிவந்து நம் மடியில் கிடத்துவது இளையராஜாவின் அற்புதம்.

மொத்தத்தில் அந்தப் படத்தின் முதன்மைப் பாத்திரம் அங்குலிமாலாக வரும் ராஜ்குமார்தான். இரண்டாம் பாத்திரமாக மிரட்டுபவர் கமலாதாஸாக வரும் நித்யா மேனன். அவருக்கு நியாயம் செய்யும் பாத்திரம் தாகினியாக வரும் அதிதி ராவ் ஹைதரி. அவருக்குத் துணை செய்யும் பாத்திரமாக கெளதம் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இவர்களுக்கிடையில் இயக்குநர் ராம் கைசூப்பும் குழந்தையாக குறுக்கமாக்கத் திரிகிறார். நரேன், ஷாஜி, சிங்கம் புலி, ரேணுகா ஆகியோர் வந்து போகிறார்கள்.

ஆக, இந்தப்படத்தின் நாயகத் தன்மையோடு மிளிர்பவர் யார் என்றால்…
மிஷ்கினும் இளையராஜாவும்தான்.
-தமிழ் முதல்வன்
tamizhmuthalvan@gmail.com


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here